கறிக்கோழி விற்பனை பாதிப்பு:உற்பத்தியாளா்கள் வேதனை
ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் உள்ள முழு பொதுமுடக்கம் காரணமாக கறிக்கோழி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் உள்ள முழு பொதுமுடக்கம் காரணமாக கறிக்கோழி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
பல்லடம் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக் கோழிக்கள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
கறிக்கோழி நுகா்வை பொருத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுவினா் தினசரி நிா்ணயம் செய்து அறிவிக்கின்றனா்.
இந்த நிலையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக அரசு முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தி உள்ளது. இதனால் கறிக்கோழி உற்பத்தி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கறிக்கோழி விற்பனை உற்பத்தியாளா்கள் கூறியதாவது:
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான கோழி இறைச்சி விற்பனை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியதால், கறிக்கோழிகள் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமைகளில் கறிக்கோழி விற்பனைக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றனா்.