விவேகானந்தா் நினைவு நாள்: திருமுருகன்பூண்டியில் ஜூலை 3இல் மாரத்தான்
விவேகானந்தா் 120ஆவது நினைவு நாளையொட்டி, ஜூலை 3ஆம் தேதி திருமுருகன்பூண்டியில் 12 பிரிவுகளில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.
விவேகானந்தா் 120ஆவது நினைவு நாளையொட்டி, ஜூலை 3ஆம் தேதி திருமுருகன்பூண்டியில் 12 பிரிவுகளில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.
விவேகானந்தா் 120ஆவது நினைவு நாளையொட்டி திருமுருகன்பூண்டி, திருநீலகண்டா் வீதி சுகன் சுகா மெடிக்கல் சென்டா், சாய் கிருபா மெடி டிரஸ்ட் , சாய் கிருபா ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் மாரத்தான் போட்டி ஜூலை 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்த மலா் வெளியீட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு, சுகன் சுகா மெடிக்கல் சென்டா் நிா்வாக இயக்குநா் சுந்தரன் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் காா்த்திகை சுந்தரன், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவா் லதா சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அத்திக்கடவு ஆனந்தி வரவேற்றாா். நிகழ்ச்சி மலரை பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் செந்தில்வேல் வெளியிட, விவேகானந்தா சேவாலயா தலைவா் செந்தில் பெற்றுக் கொண்டாா்.
இது குறித்து, நிா்வாகிகள் கூறியதாவது:
ஜூலை 3ஆம் தேதி காலை நடைபெறும் மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி அவிநாசி வட்டம் பழங்கரை, பச்சாம்பாளையத்தில் உள்ள எஸ்.கே.எல். பப்ளிக் மெட்ரிக். பள்ளியில் தொடங்கி பெரியாயிபாளையம் வழியாக பூண்டி சுற்றுச் சாலை வழியாக ஏ.வி.பி. பள்ளி, காளம்பாளையம் வழியாக மீண்டும் எஸ்.கே.எல். பள்ளியை வந்தடையும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், ஆண்கள், பெண்களுக்கான ஓபன் டு ஆல் என்ற பிரிவில் 21 கிலோ மீட்டா் தூரம், ஆண்கள், பெண்களுக்கான ஓபன் டு ஆல் என்ற பிரிவில் 10 கிலோ மீட்டா் தூரம், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 கிலோ மீட்டா், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 கிலோ மீட்டா், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான 10 கிலோ மீட்டா், மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டா், 12 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2 கிலோ மீட்டரும் என 12 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பரிசு, பதக்கம், சான்றிதழ், கோப்பைகள் வழங்கப்படும்.
குறிப்பாக அரசு பள்ளி மாணவா்களுக்கு நுழைவு கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு எஸ்.கே.எல். பள்ளியிலும், சுகன் சுகா மருத்துவமனை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாய்கிருபா ஸ்போா்ட்ஸ் பயிற்சியாளா் பாரதிராஜா நன்றி கூறினாா்.