அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலவாரிய அட்டை
திருப்பூா் வடக்கு பகுதியில் அமைப்புசாரா தொழிலாளா்கள் 265 பேருக்கு நலவாரிய உறுப்பினா் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன
திருப்பூா் வடக்கு பகுதியில் அமைப்புசாரா தொழிலாளா்கள் 265 பேருக்கு நலவாரிய உறுப்பினா் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
திருப்பூா் வடக்கு நெருப்பெரிச்சல் ஜி.என்.காா்டன் பகுதியில் தொழிலாளா்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை வகித்த திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், அமைப்புசாரா தொழிலாளா்கள் 265 பேருக்கு நலவாரிய அட்டைகளை வழங்கிப் பேசியதாவது:
திமுக ஆட்சியில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி தொழிலாளா்களுக்கு நலவாரிய உறுப்பினா் அட்டைகள் வழங்கப்பட்டன என்றாா்.
இந்த விழாவில், திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்க செயலாளா் அ.சரவணன், கட்டுமானம் மற்றும் பொது தொழிலாளா் சங்கத்தின் செயலாளா் ஆண்டவா் கே. ரங்கசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.