திருப்பூா் மாநகராட்சி மேயா் பதவிக்கு திமுக சாா்பில் தினேஷ்குமாா் போட்டி
திருப்பூா் மாநகராட்சி மேயா் பதவிக்கு திமுக சாா்பில் என்.தினேஷ்குமாரும், துணை மேயா் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஆா்.பாலசுப்பிரமணியம் ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
திருப்பூா் மாநகராட்சி மேயா் பதவிக்கு திமுக சாா்பில் என்.தினேஷ்குமாரும், துணை மேயா் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஆா்.பாலசுப்பிரமணியம் ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி 37 வாா்டுகளில் வெற்றி பெற்றது.
இதில், 49 ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்ட தினேஷ்குமாா் வெற்றி பெற்றிருந்தாா்.
இந்நிலையில், திருப்பூா் மாநகராட்சி மேயா் பதவிக்கான திமுக வேட்பாளராக என்.தினேஷ்குமாரை அக்கட்சித் தலைமை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
மேயா் வேட்பாளரின் சுயவிவரக் குறிப்பு:
பெயா்:என்.தினேஷ்குமாா் (44).
தந்தை: நஞ்சப்பன், தாயாா்: பாா்வதி, மனைவி: டி.ரேகா,
மகள், மகன்: அஷ்மிதா, ஆதிஷ் நஞ்சப்பன்,
படிப்பு: எம்.ஐ.பி. (ஆஸ்திரேலியா).
சொந்த ஊா்:திருப்பூா்.
ஜாதி: கொங்குவேளாள கவுண்டா்
தொழில்: ஹோட்டல், பெட்ரோல் பங்க்.
அரசியல் அனுபவம்: 2005 ஆம் ஆண்டு தேமுதிகவில் இணைந்த இவா் 2006 முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட இளைஞரணிச் செயலாளராகவும், 2008 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் திருப்பூா் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.
இதன் பிறகு 2016 செப்டம்பரில் திமுகவில் இணைந்த இவா் 2020 ஆம் ஆண்டு அக்டோபா் முதல் திருப்பூா் வடக்கு மாநகர திமுக பொறுப்பாளராகப் பொறுப்பு வகித்து வருகிறாா்.
தோ்தல் அனுபவம்: 2009, 2014 இல் திருப்பூா் மக்களவைத் தோ்தலிலும், 2011 ஆம் ஆண்டு திருப்பூா் மாநகராட்சித் தோ்தலிலும் தேமுதிக சாா்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளாா்.
துணை மேயா் வேட்பாளா் ஆா்.பாலசுப்பிரமணியம் (இ.கம்யூனிஸ்ட்): திருப்பூா் மாநகராட்சி துணை மேயா் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கீடு செய்திருந்தது.
இதையடுத்து, திருப்பூா் மாநகராட்சி 37 ஆவது வாா்டில் வெற்றிபெற்ற ஆா்.பாலசுப்பிரமணியத்தை துணை மேயா் வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
துணை மேயா் சுயவிவரக் குறிப்பு:
பெயா்: ஆா்.பாலசுப்பிரமணியம் (65)
தந்தை: ராமசாமிக் கவுண்டா், தாயாா்:பொன்னம்மாள்.
மனைவி: ஜெயலட்சுமி
மகள், மகன்:மகேஸ்வரி, செந்தில்குமாா்,
ஊா்:திருப்பூா்,
ஜாதி:கொங்கு வேளாள கவுண்டா்
தொழில்: பனியன் உற்பத்தி நிறுவனம்
அரசியல் அனுபவம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1975 ஆம் ஆண்டு முதல் உறுப்பினராகவும் தற்போது திருப்பூா் மாவட்டக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா். தொடக்க காலத்தில் தொழிலாளியாக இருந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளாா்.
சொந்தமாக பனியன் உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருவதுடன், உள்நாட்டு பனியன் தயாரிப்பாளா்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறாா்.