வடகிழக்கு மக்களுக்கு எதிரான இனப் பாகுபாடு குற்றங்கள்: மத்திய அரசிடம் தரவுகள் இல்லை!
மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பேசியவை...
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கெதிரான இனப்பாகுபாடு குற்றங்கள் தொடர்பாக மத்திய அரசிடம் தரவுகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிரான இனப்பாகுபாடு குற்றங்கள் பற்றி காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் கேட்ட கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்தார். அதில், “இந்திய அரசியலமைப்பின் ஏழாவது பகுதியின்படி காவல்துறை, சட்ட ஒழுங்கு ஆகியவை மாநில அரசின் விவகாரங்களாகும்.
குற்றங்களைத் தடுத்தல், கண்டறிதல், பதிவு செய்தல், விசாரித்தல் மற்றும் சட்ட முகமைகள் மூலம் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடருதல் போன்றவை மாநில அரசுக்குரியப் பொறுப்புகளாகும்.
Advertisement
Advertisement
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட குற்றத் தரவுகளைத் தொகுத்து இந்தியாவில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான அறிக்கைகளை தேசிய குற்ற ஆவணப் பிரிவு வெளியிடுகிறது. கடந்த 2023 வரையிலான அறிக்கைகள் தற்போது கிடைக்கின்றன.
இதில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீதான வெறுப்புப் பேச்சு, இனப்பாகுபாடு, துன்புறுத்தல் தொடர்பான குற்றங்கள் பற்றிய தரவுகள் மத்திய அரசால் பராமரிக்கப்படவில்லை.
இந்தக் குற்றங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க தற்போதுள்ள சட்ட விதிகள் வழிவகுக்கின்றன” என்று அவர் பேசினார்.
மேலும், ”இதுசம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான விவகாரங்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுரைகள் வழங்கி, இதனை விசாரிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்தது, சட்ட முகமைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது போன்ற நடவடிக்கைகளை உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.
இதுதொடர்பான புகார்களை பதிவு செய்யும் முறையை எளிதாக்கியதுடன் தில்லி காவல்துறையில் வடகிழக்கு பிராந்தியத்திற்கான சிறப்பு காவல் பிரிவு தொடங்கப்பட்டு, இதற்கென பிரத்யேக உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு நேரும் இனப் பாகுபாடு மற்றும் குறைதீர்ப்புப் பிரச்சினைகளைத் தவறாமல் ஆய்வு செய்து வருகிறோம்” என்று நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
No central data on racial bias against people from Northeast, govt says in Lok Sabha
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.