முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள்!

கடந்த மாதத்தில் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன

Updated On : 4 ஜூலை 2026, 6:34 am IST
மாதிரிப் படம்
பகிர்:

கடந்த மாதத்தில் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்ற குற்றச்சாட்டு தொடர்பான விவாதங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெற்றன உள்நோக்கத்துடன் கூறப்படுகிறது என இந்தக் குற்றச்சாட்டைப் புறந்தள்ளிவிட முடியாது.

தமிழ்நாடு மட்டுமின்றி ஏனைய இந்திய மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்ற நிகழ்வுகள் குறித்த ஆய்வும், இப்பிரச்னையை பல உலக நாடுகள் எவ்வாறு எதிர்கொண்டு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்கின்றன என்பது குறித்த ஆய்வும் நமக்கு வழிகாட்டியாக அமையும்.

அமெரிக்காவிலுள்ள ஜார்ஜ்டவுன் பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு நிறுவனமும் நார்வேயிலுள்ள ஒஸ்லோ அமைதி நிறுவனமும் கூட்டாக இணைந்து, உலக நாடுகளில் பெண்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வை 2017-ஆம் ஆண்டிலிருந்து மேற்கொண்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு நாட்டுக்கான "பெண்கள் பாதுகாப்பு குறியீடு' எண்ணை இவ்விரு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

181 உலக நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 2025-26-ஆம் ஆண்டுகளுக்கான பெண்கள் நலன் மற்றும்பாதுகாப்பு குறியீடு எண்களை இவ்விரு நிறுவனங்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளன. தரவரிசைப் படுத்தப்பட்டுள்ள இந்தக் குறியீடு எண்கள் பட்டியலில் இந்தியா 131-வது இடம் பெற்று பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பில் உலக நாடுகள் பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ளது. 2023-24-ஆம்

ஆண்டில் இந்தத் தரவரிசை குறியீட்டில் 128-ஆக இருந்த இந்தியா 2025-26-ஆம் ஆண்டில் மேலும் பின்னடைந்து 131-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பூடான், நேபாளம், சீனா, இலங்கை ஆகியவற்றில் பெண்களின் நலன் மற்றும் பாதுகாப்பு இந்தியாவைக் காட்டிலும் மேம்பட்டிருக்கிறது என்பதை 2025-26 ஆண்டுகளுக்கான ஜார்ஜ்டவுன் பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீடு எண்கள் வெளிப்படுத்துகின்றன.

இந்திய மாநிலங்களில் நிகழும் குற்றங்கள் குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஆண்டுதோறும் அறிக்கை வெளி

யிடுகிறது. இந்தக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகின்ற பெருநகரம் மற்றும் மாநிலங்களின் பட்டியலில் புது தில்லி, தெலங்கானா, ஒடிஸா, ராஜஸ்தான், ஆந்திரம் ஆகியவை முன்னிலையில் உள்ளன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பெண் மக்கள்தொகைக்கு 130 குற்றங்கள் என்ற விகிதத்தின்படி புது தில்லி யூனியன் பிரதேசத்திலும், 128 குற்றங்கள் தெலங்கானாவிலும், 118 குற்றங்கள் ஒடிஸôவிலும், 106 குற்றங்கள் ராஜஸ்தானிலும், 95 குற்றங்கள் ஆந்திரத்திலும், 80 குற்றங்கள் கேரளத்திலும் நிகழ்ந்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பெண் மக்கள்தொகைக்கு 29 குற்றங்கள் என்ற விகிதத்தின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான தேசிய சராசரி குற்ற விகிதம் 65 ஆகும்.

ஒரு முக்கியமான கேள்வியை இந்தப் புள்ளிவிவரங்கள் மீதான ஆய்வு எழுப்புகிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் 2024-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதத்தைக் காட்டிலும், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் விகிதம் மிகக் குறைவாக உள்ளது. குறிப்பாக, தேசிய சராசரி குற்ற விகிதத்தில் 50 சதவீதத்துக்கும் குறைவாக தமிழ்நாட்டில் பதிவான குற்றங்களின் விகிதம் உள்ளது.

பெரும்பாலான இந்திய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த அனைத்துப் புகார்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படுவதால், குற்றங்களின் எண்ணிக்கையும், குற்ற விகிதமும் கணிசமாக அதிகரித்திருப்பதைக் காணமுடி

கிறது. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் குற்ற எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் நோக்கத்துக்காக அனைத்துப் புகார்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. அதன் விளைவாக, அந்த மாநிலங்களில் குற்ற விகிதம் குறைந்து காணப்படுகிறது என குற்றவியலாளர்கள் கருதுகின்றனர்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாத சம்பவங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை புறநகரில் உள்ள ஒரு காவல் நிலையத்துக்கு ஒரு வயதான பெண் வந்து, மாலை நேரத்தில் ரயில்வே பாதை அருகில் யாரோ ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என

வாய்மொழியாகப் புகார் அளித்தார். அந்தப் புகார் பொய்யானது எனக் கருதிய உதவி ஆய்வாளர், அதன் மீது எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்துக்குள் "பெண் காணவில்லை' என இரண்டு புகார்கள் அந்தக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டன. பெண் காணவில்லை என வழக்குகள் தொடர்ந்து பதிவானதால், இந்த வழக்குகளின் புலன் விசாரணையில் உயரதிகாரிகள் கவனம் செலுத்தினர்.

புலம் பெயர்ந்த தொழிலாளி ஒருவர் மாலை நேரத்தில் அந்தப் பகுதியில் உள்ள ரயில்வே பாதை வழியாக தனியாக நடந்துசெல்லும் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்துவந்தார் என்பதும், அதன் விளைவாக இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்பதும் புலன் விசாரணையில் தெரியவந்தன. காவல் நிலையம் வந்த பெண் வாய் மொழியாகக் கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமையால் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது.

பள்ளி மாணவி எதிர்கொண்ட மற்றொரு பாலியல் வன்கொடுமைச் சம்பவம் குறித்து பார்ப்போம். பள்ளி மாணவி ஒருவர் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அந்த மாணவியைப் பரிசோதனை செய்த பெண் மருத்துவரிடம், தான் ஒரு அநாதை இல்லத்தில் தங்கிப் படித்து வருவதாகவும், அந்த இல்லப் பொறுப்பாளர் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்றும் தெரிவித்தார். இது குறித்து தான் புகார் கொடுக்க விரும்பவில்லை என்றும் கூறி, மருந்துகளைப் பெற்றுக் கொண்டு அந்த மாணவி சென்றுவிட்டார்.

அந்தப் பெண் மருத்துவர் தன் சகோதரரை அழைத்துக்கொண்டு, அந்த நகரத்தின் காவல் உயரதிகாரியை நேரில் சந்தித்து நடந்த சம்பவத்தை விவரித்தார். அந்தப் பள்ளி மாணவிக்கு நடந்த வன்கொடுமை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அந்த காவல் உயரதிகாரி உறுதி

யளித்தார். அந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் பொறுப்பை காவல் அதிகாரி ஒருவரிடம் ஒப்படைத்தார். அந்த விசாரணை அதிகாரி அநாதை இல்லப் பொறுப்பாளரிடம் விசாரித்துவிட்டு, அப்படி ஒரு மாணவி அங்கு தங்கிப் படிக்கவில்லை என்று உயர் காவல் அதிகாரிக்கு பதில் தெரிவித்துவிட்டு, அந்த விசாரணையை முடிவு செய்தார்.

இந்திய மாநிலங்கள் பலவற்றைக் காட்டிலும், தமிழ்நாடு காவல் துறையில் அனைத்துக் குற்ற நிகழ்வுகள் மீதும் வழக்குகள் பதிவு செய்வதில் தயக்கம் நீண்டகாலமாக நிலவி வருகிறது. அதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.

அனைத்து குற்றச் சம்பவங்கள் குறித்து வழக்குகள் பதிவு செய்தால், மாநிலத்தில் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டு பொது வெளியில் விவாதப் பொருளாகிவிடும் என்ற அச்சம் காவல் துறையில் நிலவுகிறது. இத்தகைய விவாதம் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தும் காவல் துறையில் நிலவுகிறது. மேலும், அனைத்துப் புகார்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளத் தேவையான காவல் அதிகாரிகள் காவல் நிலையங்களில் இல்லை எனவும் காவல்துறையினர் கருதுகின்றனர்.

குற்றங்கள் அனைத்தையும் பதிவு செய்ய காவல் துறையினர் தயங்குவது மட்டுமின்றி, முக்கியமான வழக்குகளிலும் புலன் விசாரணை முறையாகச் செய்யப்படாத நிலையைக் காண முடிகிறது.

பொறியியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, முன்னாள் மாணவர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து, மாணவி ஒருவரைத் தனிப்பட்ட காரணத்துக்காக தாக்கி, கொலை செய்த வழக்கு தொடர்பான மேல்முறையீடு விசாரணையின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சில தினங்களுக்கு முன்பு வழங்கியது. இந்த வழக்கில் புலன் விசாரணை முறையாகச் செய்யவில்லை என்பது உயர்நீதிமன்றத் தீர்ப்பில் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கியமான குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படும்வரை காவல் உயரதிகாரிகள் அழுத்தம் கொடுப்பார்கள். அதன் பின்னர், புலன் விசாரணை முறையாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை அவர்கள் பெரும்பாலும் கண்காணிப்பதில்லை. அதன் விளைவாகப் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் நீதிமன்றங்களில் விடுதலை பெற்று விடுகின்றனர்.

அனைத்துக் குற்றங்கள் மீதும் விரைந்து வழக்குகள் பதிவு செய்து, முறையாக புலன் விசாரணை மேற்கொள்வதே குற்றத் தடுப்புக்கான சிறந்த வழிமுறையாகும்.

கட்டுரையாளர்:

முன்னாள் காவல் துறை உயரதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments