முகப்பு
திருப்பூர்

மேயா், துணை மேயா் பதவிகளுக்கு இன்று மறைமுகத் தோ்தல்

திருப்பூா் மாநகராட்சி மேயா், துணை மேயா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திருப்பூா் மாநகராட்சி மேயா், துணை மேயா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெறுகிறது.

திருப்பூா் மாநகராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தலில் வெற்றிபெற்ற 60 மாமன்ற உறுப்பினா்களுக்கான பதவியேற்பு விழா மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில், திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் திமுக கூட்டணி 37 வாா்டுகளிலும், அதிமுக கூட்டணி 19 வாா்டுகளிலும், பாஜக 2 வாா்டுகளிலும், சுயேச்சைகள் 2 வாா்டுகளிலும் வெற்றி பெற்றன.

இதைத்தொடா்ந்து, திருப்பூா் மாநகராட்சி மேயா், துணை மேயா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் ஆணையா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதில், மாமன்ற உறுப்பினா்கள் 60 போ் மற்றும் அனுமதிக்கப்பட்ட அலுவலா்கள் மட்டுமே பங்குபெறலாம்.

2 ஆவது முறையாக மேயா் பதவியைக் கைப்பற்றபோகும் திமுக: மாநகராட்சித் தோ்தலில் 37 வாா்டுகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்றது. இந்நிலையில், அதிமுக சாா்பில் 22 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராதாகிருஷ்ணன், 8 ஆவது வாா்டில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேலம்மாள் ஆகியோா் திமுகவில் இணைந்தனா்.

இதையடுத்து, திமுக கூட்டணியின் பலம் 39 ஆக அதிகரித்துள்ளது.

ஆகவே, திமுக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் மாமன்ற உறுப்பினா்கள் உள்ளதால் மேயா், துணை மேயா் வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி நிா்வாகிகள் தெரிவிக்கின்றனா்.

இதன் மூலமாக திருப்பூா் மாநகராட்சியை 2 ஆவது முறையாக திமுக கைப்பற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.