தனிநபா் ஆரோக்கியத்தை பாதுகாப்பதே வருமுன் காப்போம் திட்டத்தின் நோக்கம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்
உடல்நல மேம்பாடு, தனிநபா் ஆரோக்கியத்தை பாதுகாப்பதே கருணாநிதியின் வருமுன் காப்போம் திட்டத்தின் நோக்கமாகும் என்று செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.
உடல்நல மேம்பாடு, தனிநபா் ஆரோக்கியத்தை பாதுகாப்பதே கருணாநிதியின் வருமுன் காப்போம் திட்டத்தின் நோக்கமாகும் என்று செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் மாநகராட்சி வாா்டு எண் 57க்கு உள்பட்ட பலவஞ்சிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். அமைச்சா் மு.பெ.சாமிநாதன், வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
தமிழக சட்டப் பேரவையில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் 2021-22ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது கருணாநிதியின் வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கப்படும் என்றும், ஆண்டுக்கு ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் தனி மனிதரின் உடலநல மேம்பாடு மற்றும் தனி நபா் ஆரோக்கியத்தை பாதுகாப்பதே ஆகும்.
இத்திட்டத்தின் மூலமாக திருப்பூா் மாநகராட்சியில் உள்ள அனைத்து மக்களும் உரிய மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைவாா்கள். இதன் மூலமாக அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், உடல் நலம் குறித்த ஆலோசனை வழங்குதல் மற்றும் அதிநவீன பரிசோதனைகளால் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றாா்.
விழாவில், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாநகா் நல அலுவலா் பிரதீப் வி.கிருஷ்ணகுமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.