திருப்பூர்

காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கம்

DIN

திருப்பூர்: தமிழகத்தில் கடும் வீழ்ச்சியடைந்துள்ள தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகளை அரசு நியாயமான விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டமானது அச்சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

எங்களது நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளதை மனதார வரவேற்கிறோம். ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. டெல்டா மாவட்டங்களில் உற்பத்தியாகும் நெல்லைக்கூட அரசால் கொள்முதல் செய்யப்படமுடியவில்லை. 

தக்காளி, வெங்காயம் பற்றாக்குறையின்போது வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து மக்களைக் காப்பாற்றும் அரசானது, விலை வீழ்ச்சியடையும்போது விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கான எந்த ஒரு வழிமுறையும் ஏன் எடுப்பதில்லை. ஆகவே, தக்காளி, வெங்காயம் மற்றும் காய்களை விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலையில் அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். 

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைத் தொகைகள் வழங்குவதற்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தென்னை கொப்பரை ஒரு கிலோ ரூ.105.90 பைசா என்று விலையை நிர்ணயம் செய்துள்ள மத்திய அரசு, தற்போது ரூ.85-க்கு கொள்முதல் செய்கிறது. இதுதொடர்பான எந்தவிதமான அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. 

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகையை வழங்காத அரசு, ஆலையை நவீனப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது கண்டிக்கத்தக்கதாகும். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்று சொல்லி விஷத்தை விற்பனை செய்கின்றனர். ஆனால் உடலுக்கு நன்மை விளைவிக்கும் கள் விற்பனைக்கு அரசு தடைவிதித்துள்ளது.

ஆகவே, கள்ளுக்கு உண்டான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்றனர். இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் எம்.ஈஸ்வரன், மாநகர் மாவட்டத் தலைவர் கோகுல்ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

நாடு விட்டு நாடு பயணம்: இசை நிகழ்வு காணவா? டெய்லர் ஸ்விஃப்ட் காய்ச்சலில் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT