முகப்பு
திருப்பூர்

தெக்கலூரில் நிற்காமல் சென்ற தனியார், அரசுப் பேருந்துகள் சிறைப்பிடிப்பு

தெக்கலூர் பேருந்து நிறுத்ததில் நிற்காமல் சென்ற பேருந்துகளை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

தெக்கலூர் பேருந்து நிறுத்ததில் நிற்காமல் சென்ற பேருந்துகளை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தெக்கலூரில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புறவழிச்சாலை அமைக்கப்பட்டதையடுத்து, இவ்வழியாக வந்து செல்லும் தனியார், அரசுப் பேருந்துகள், பேருந்து நிறுத்தத்தில் நிற்காமால் புறவழிச்சாலை மேம்பாலத்தின் மீது சென்று வந்தன. இதையடுத்து பலமுறை அப்பகுதி மக்கள், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் மோட்டார் வாகன அலுவலர்கள் உத்தரவின் பேரில், பேருந்துகள் நிறுத்தத்தில் நின்று சென்று கொண்டிருந்தது. 

இருப்பினும் தொடர்ந்து தனியார், அரசுப் பேருந்துகள் நிற்காமல், புறவழிச்சாலை மேம்பாலத்திலேயே சென்று வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகினறனர். இந்நிலையில் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை மாலை கோவையில் இருந்து தெக்கலூர் செல்வதற்காக  அரவிநாசி பேருந்து நிறுத்தத்தில் திருப்பூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏறியுள்ளனர். இதையடுத்து தனியார் பேருந்து நடத்துநர், பேருந்து அவிநாசி அருகே வந்தபோது, தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காது, புறவழிச்சாலையாகத் தான் செல்லும் என்று கூறியுள்ளார். 

இதையடுத்து மாணவர்கள் திருப்பூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் ஏறியுள்ளனர். அரசுப் பேருந்து நடத்துநரும் புறவழிச்சாலை வழியாகத்தான் செல்லும் என்றும எனவே, புறவழிச் சாலையில் இறங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு சரி எனக் கூறிய மாணவர்கள், அரசுப் பேருந்தில் ஏறி விட்டு, இத்தகவலை தெக்கலூர் பெற்றோர், பொதுமக்களிடம் தெரியப்படுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவையில் இருந்து தெக்கலூர் புறவழிச்சாலை வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து வந்த தனியார் பேருந்துகள், அரசுப் பேருந்துகள் என ஏழுக்கும் மேற்பட்ட பேருந்துகளை சிறைப்பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவநாசி போலீஸார் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் இனிவரும் காலங்களில் தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திச் செல்வோம் என உறுதியளித்தனர். பிறகு பேருந்துகள் விடுவிக்கப்பட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் தொடர்ந்து பேருந்துகள் நிற்காமல் சென்று வருவது குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.