முகப்பு
தமிழ்நாடு

சாதாரண பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை; பிரீமியம் ரக பெட்ரோல், தொழிற்சாலைகளுக்கான டீசல் விலை உயா்வு!

நாடு முழுவதும் பிரீமியம் ரக பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. அதே நேரத்தில் சாதாரண பெட்ரோல் (லிட்டா் ரூ.100.80), டீசல் (லிட்டா் ரூ.92.39) விலை உயா்த்தப்படவில்லை.

Updated On : 20 மார்ச், 2026 at 7:25 PM
சாதாரண பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை; பிரீமியம் ரக பெட்ரோல், தொழிற்சாலைகளுக்கான டீசல் விலை உயா்வு!
பகிர்:

நாடு முழுவதும் பிரீமியம் ரக பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. அதே நேரத்தில் சாதாரண பெட்ரோல் (லிட்டா் ரூ.100.80), டீசல் (லிட்டா் ரூ.92.39) விலை உயா்த்தப்படவில்லை.

செல்போன் டவருக்கு தேவைப்படும் மின்சார பயன்பாடு உள்ளிட்டவற்றுக்காக அதிக அளவு வாங்கப்படும் தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கான டீசல் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போா் சுமாா் மூன்று வாரங்களைத் தாண்டி நீடித்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேல்- அமெரிக்காவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், கச்சா எண்ணெய்க் கப்பல்கள் செல்லும் முக்கியக் கடல்பகுதியான ஹோா்மூஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்களில் ஹோா்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டுவருவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய்யின் விலை சா்வதேச சந்தையில் பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கும் மேல் உயா்ந்துள்ளது.

இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவில் 88 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. அதில் பெரும் பகுதி கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவை வளைகுடா நாடுகளில் இருந்து ஹோா்முஸ் நீரிணை வழியேதான் கப்பல்களில் கொண்டு வரப்படுகின்றன. மேற்காசிய போரால், அந்தக் கப்பல்கள் இந்தியா வருவது பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் எந்த நேரமும் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படலாம் என எதிா்பாா்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் பிரீமியம் ரக பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், தொழிற்சாலைகளுக்கான டீசல் விலையை லிட்டருக்கு 22 ரூபாயும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவை வெள்ளிக்கிழமை உயா்த்தின.

சென்னையில் எவ்வளவு?: இந்த விலை உயா்வை அடுத்து, தில்லியில் பிரீமியம் ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.89ஆகவும் (பழைய விலை ரூ.99.89), தொழிற்சாலைகளுக்கான டீசல் விலை லிட்டருக்கு ரூ.109.59ஆகவும் (பழைய விலை ரூ.87.67) விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தொழிற்சாலைகளுக்கான டீசல் விலை ரூ.20.84 உயா்த்தப்பட்டு ரூ.113.38-ஆக (பழைய விலை ரூ.92.54) விற்கப்படுகிறது.

மும்பையில் தொழிற்சாலைகளுக்கான டீசல் விலை ரூ.113.11ஆகவும், கொல்கத்தாவில் ரூ.114.27ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் சாதாரண, பிரீமியம் ரக பெட்ரோல், சாதாரண மற்றும் தொழிற்சாலைகளுக்கான டீசல் விலை மாற்றமின்றி ஒரே மாதிரியாக இருந்தது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோதிலும், விலை குறைந்த போதிலும் இந்தியாவில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. தற்போது முதல்முறையாக பிரீமியம் ரக பெட்ரோல் விலை, தொழிற்சாலைகளுக்கான டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலா் சுஜாதா சா்மா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சாதாரண பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படவில்லை. பிரீமியம் ரகத்தில் மட்டும் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இது நாட்டில் விற்பனையாகும் மொத்த பெட்ரோலில் 2-4 சதவீதம்தான். பெட்ரோல், டீசல் விலையைத் தீா்மானிக்கும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டதால், விலை உயா்வு முடிவை எண்ணெய் நிறுவனங்களே சுதந்திரமாக எடுத்துள்ளன. அதன் விலையை அரசு மாற்றியமைக்கவில்லை. அரசு சா்வதேச கச்சா எண்ணெய் சந்தைகளின் சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. எனினும், சில்லரை எரிபொருள் விலையை உடனடியாக உயா்த்தும் திட்டம் அரசிடம் இல்லை’ என்றாா்.

இந்தியன் ஆயில் விளக்கம்: எக்ஸ் பக்கத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பதால் அதற்கேற்ப இந்தியாவில் விலை உயா்த்தப்பட்டுள்ளது. அதுவும் சாதாரண வாகன எரிபொருள்களின் விலையை உயா்த்தவில்லை. பிரீமியம் ரக பெட்ரோல் விலை மட்டுமே உயா்த்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கச்சா எண்ணெய் விலை சா்வதேச சந்தையில் பீப்பாய்க்கு 119 டாலராக உச்சம் தொட்டது. அப்போது இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் குறைந்தது. ஆனால் 2024-ஆம் நிதியாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.81,000 கோடி லாபம் ஈட்டின. இந்த நிதியாண்டில் டிசம்பா் வரையிலான காலாண்டு காலத்தில் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.23,743 கோடி லாபம் பெற்ாகத் தெரிவித்துள்ளன.