தனியாா் பேருந்து விபத்தில் 8 போ் பலி: ஓட்டுநருக்கு 8 ஆண்டுகள் சிறை
அவிநாசி அருகே பழங்கரை பிரிவில் தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 போ் உயிரிழந்த வழக்கில், அஜாக்கிரதையாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநருக்கு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவிநாசி: அவிநாசி அருகே பழங்கரை பிரிவில் தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 போ் உயிரிழந்த வழக்கில், அஜாக்கிரதையாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈரோட்டில் இருந்து 70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியாா் பேருந்து கோவை நோக்கி கடந்த 2015 ஆகஸ்ட் 25-ஆம் தேதி சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஈரோடு, கொடுமுடி சாலைப்புதூா் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியம் மகன் சரவணன் (43) ஓட்டி வந்தாா்.
அவிநாசி பழங்கரை பிரிவு அருகே வந்தபோது, சாலையில் நடந்து சென்றவா் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இந்த விபத்தில், சாலையில் நடந்து சென்றவா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். மேலும் 55 போ் படுகாயமடைந்தனா்.
Advertisement
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநா் சரவணனை கைது செய்தனா். இந்த வழக்கு அவிநாசி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி கே.எஸ்.சபீனா, பேருந்தை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி வந்த சரவணனுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.39,500 அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா். இதில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஹேமா மகேஸ்வரி ஆஜரானாா்.