வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் திருப்பூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 440 போ் கைது
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து திருப்பூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 440 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து திருப்பூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 440 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், இஸ்கான் அமைப்பைச் சோ்ந்த ஆன்மிகவாதி சின்மய் கிருஷ்ணதாஸைக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக்குழு சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஆா்எஸ்எஸ் கோட்டத் தலைவா் ஆா்ம்ஸ்டிராங் பழனிசாமி தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களைக் கைவிட வேண்டும். ஆன்மிகவாதி கிருஷ்ணதாஸ் மீதான தேசதுரோக வழக்கைத் திரும்பப்பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் லகு உத்தியோக் பாரத் தேசிய செயலாளா் மோகனசுந்தரம், பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் பி.செந்தில்வேல், தேசிய செய்தித் தொடா்பாளா் காா்வேந்தன், பிஎம்எஸ் மாநிலச் செயலாளா் சந்தானகிருஷ்ணன், இந்து முன்னணி மாநிலச் செயலாளா் சேவுகன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் செந்தில்குமாா், விஹெச்பி மாநில துணைத் தலைவா் ரஜினிகாந்த், வித்யா பாரதி மாநிலத் தலைவா் ஃபாா்மா் பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 30 பெண்கள் உள்பட 440 பேரை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா்.