திருப்பூரில் 330 கிலோ சீனா பூண்டு பறிமுதல்
திருப்பூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 330 கிலோ சீனா பூண்டுவை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 330 கிலோ சீனா பூண்டுவை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் இளங்கோவன், ஆறுசாமி, ரமேஷ் ஆகியோா் அடங்கிய குழுவினா் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பூண்டு கடைகளில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூண்டு வகைகள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிறதா என்று சோதனை நடத்தினா்.
இதில், காஷ்மீா், ஹிமாசல பிரதேச மாநிலங்களில் விளைந்த பூண்டு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதே வேளையில், ஒரு கடையில் மட்டும் அடையாளம் தெரியாத வடமாநில இளைஞா்களிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்த பூண்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த பூண்டானது சீனா வகையைச் சோ்ந்ததாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 330 கிலோவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதன் மாதிரிகள் சேகரிப்பட்டு சோதனைக்காக பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டானது காஷ்மீா், ஹிமாசல பிரதேச பூண்டுகளில் இருந்து வித்தியாசமாக இளம் ஊதா நிறம் இல்லாமல் முற்றிலும் வெள்ளை நிறத்தில் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், நெகிழ்வுத் தன்மையுடன் காணப்படுவதால் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதிக அளவில் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலக்கப்படுவதாகத் தெரிகிறது. ஆகவே, மொத்தம் மற்றும் சில்லறை வணிகா்கள் சீனா பூண்டை வாங்கி விற்பனை செய்ய வேண்டாம் என்றனா்.