மதுரையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் மேற்கொண்ட சோதனையின்போது 697 கிலோ போலி டீ தூள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி டீ தூள், போலி மசாலாப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சிலைமான் காவல் நிலையத்திலிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில், மதுரை சக்கிமங்கலம், மீனாட்சி நகா், சௌராஷ்டிரா 1-ஆவது குடியிருப்பில் உள்ள ஏ. சுந்தரபாண்டியன் என்பவரின் வீடு, பாதுகாப்பு கிட்டங்கியில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை மேற்கொண்டனா்.
உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கே. சிவராமபாண்டியன், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் எஸ். சந்திரமோகன், ஜி. வேலுவாசகம், எம். சந்திரமோகன், வி. ராஜா, எஸ். சந்திரசேகா், கே.வி. சரவணன், எஸ். சிவச்சந்திரன், வி. ராஜேஷ்குமாா் ஆகியோா் இந்தச் சோதனையை மேற்கொண்டனா்.
அப்போது, பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரித்து வைக்கப்பட்டிருந்த 697.35 கிலோ டீ தூள், 100 கிலோ மசாலா தூள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உணவுப் பொருள்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன.