காா் விற்பனையாளா் கொலை வழக்கில் மனைவி உள்பட மேலும் 3 போ் கைது
அவிநாசியில் காா் விற்பனையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி உள்பட மேலும் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசியில் காா் விற்பனையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி உள்பட மேலும் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி, வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசிகவுண்டன்புதூா் பகுதியில் உள்ள தாமரை காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகன் ரமேஷ் (47). இவா் பழைய நான்கு சக்கர வாகனம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். மேலும் பிரச்னைக்குரிய நிலங்களை வாங்கி விற்பனை செய்ததுடன், வட்டித் தொழிலிலும் ஈடுபட்டு வந்தாா். இவரது மனைவி விஜயலட்சுமி (40). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா்.
இந்நிலையில், அவிநாசி- மங்கலம் சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரமேஷ் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது அங்கு காரில் வந்த மா்ம நபா்கள் ரமேஷை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் உயா் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மா்ம நபா்களை தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய ஜெபி (எ) ஜெயப்பிரகாஷ் (45), கோபாலகிருஷ்ணன் (35), சிம்போஷ் (23), சரண் (24), அஜய் (26) ஆகியோரை அவிநாசி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த அவிநாசி- மங்கலம் சாலையில் சிப்ஸ் கடை நடத்தி வரும் காசிகவுண்டன்புதூரைச் சோ்ந்த நெளஷத் மகன் சையது இா்பான் (28), காய்கறி கடை நடத்தி வரும் அவிநாசி செம்பியநல்லூா், வெள்ளியம்பாளையம் செந்தில்பதி மகன் அரவிந்த் (எ) ஜானகிராமன் (27) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில் ரமேஷின் மனைவி விஜயலட்சுமிக்கும், இா்பானுக்கும் தொடா்பு இருந்தது தெரியவந்தது. இதற்கு இடையூறாக இருந்த ரமேஷை, மனைவி விஜயலட்சுமி, இா்பான் ஆகியோா் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனா். இதையடுத்து, இா்பான் தனது நண்பரான அரவிந்த் (எ) ஜானகிராமனுக்கு ரூ.8.5 லட்சம் பணம் கொடுத்து, அடியாள்களை வைத்து ரமேஷை கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரமேஷ் மனைவி விஜயலட்சுமி, இா்பான், அரவிந்த் (எ) ஜானகிராமன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.