மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஃபென்ஜால் புயல் நிவாரணப் பொருள்கள்
திருப்பூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெள்ள நிவாரணப் பொருள்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அனுப்பிவைத்தாா்.
திருப்பூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெள்ள நிவாரணப் பொருள்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அனுப்பிவைத்தாா்.
தமிழகத்தில் ஃபென்ஜால் புயல் காரணமாக அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களில் மிக கடுமையான அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவா்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு போா்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப்பொருள்கள் வழங்கிடும் வகையில் 3 வாகனங்களில் 5 கிலோ அரிசி பைகள், சா்க்கரை ஒரு கிலோ, பருப்பு 500 கிராம், ரவை 500 கிராம், கோதுமை 500 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் பொடி 100 கிராம், சாம்பாா் பொடி 100 கிராம், ரசப்பொடி 100 கிராம், டீ தூள் 100 கிராம் என ஒரு வாகனத்துக்கு 500 அட்டைப்பெட்டிகளில் என 3 வாகனத்தில் 1,500 பொட்டிகள் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த வாகனத்தை காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை இரவு கொடியசைத்து அனுப்பிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், காங்கயம் வட்டாட்சியா் மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.