தங்கப் பேனா, 3 கிராம் பேனா...
இன்றைய கணினி யுகத்தில் வாசிப்பு ஆர்வத்தைப் போலவே கைகளால் எழுதும் பழக்கமும் குறைந்து வருகிற நிலையில், அது உண்மையல்ல என்பதை நிரூபித்திருக்கிறது.
இன்றைய கணினி யுகத்தில் வாசிப்பு ஆர்வத்தைப் போலவே கைகளால் எழுதும் பழக்கமும் குறைந்து வருகிற நிலையில், அது உண்மையல்ல என்பதை நிரூபித்திருக்கிறது, சென்னை அடையாறில் அண்மையில் மூன்று நாள்கள் நடைபெற்று முடிந்த 'சென்னை பேனா கண்காட்சி - 2026'.
உலகில் மிக அதிக அளவில் பார்வையாளர்களைக் கொண்ட அமெரிக்காவின் வாஷிங்டன் பேனா கண்காட்சிக்கு நிகராக, சென்னையில் நடைபெற்ற இந்த மூன்றாவது பேனா கண்காட்சிக்கு 23,500 பேர் வருகை புரிந்தனர். 2025-இல் நடைபெற்ற கண்காட்சியின்போது, 16,500 பேர் வந்திருந்தனர். இதில், ரூ.7.5 லட்சத்திலான தங்கப் பேனா, 3 கிராம் எடையிலான சிறிய பேனா உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த முன்னணி பேனா ஏற்றுமதி, விற்பனையாளர் ஆதித்யா பன்சாலியிடம் பேசியபோது:
'சென்னை, தாம்பரம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பேனா தயாரிப்பு நிறுவனத்தினர், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் புகழ் பெற்ற பேனா தயாரிப்பு நிறுவனத்தினர், அவர்களின் இந்திய விற்பனையாளர்கள் என ஐம்பதுக்கும் அதிகமானோர் கண்காட்சியில் பங்கேற்றனர்.
பவேரியா என்பது ஜெர்மனியில் உள்ள ஓர் ஊர். பி.எம்.டபுள்யூ. காரில் உள்ள 'பி' இந்த பவேரியாவைக் குறிக்கிறது. அங்கே தயாரிக்கப்படும் பேனாக்கள் அதே பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனம் தயாரித்த மிகப் பிரத்யேகமான ஒரு பேனாவின் நிப் 18 கேரட் தங்கம், வைரக் கற்களைக் கொண்டது. இந்த ரகத்தில் 48 பேனாக்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒரு பேனாவின் விலை ரூ.7.5 லட்சம். இவற்றில் மூன்று இந்தியாவில் விற்பனையாகி இருக்கிறது.
உலகின் மிகச் சிறிய பேனாக்களைத் தயாரிக்கும் ஜப்பானிய ஓடோ நிறுவனத்தின் 91 மி.மீ. நீளமும், 3.7 மி.மீ. அகலமுடைய 'மினிமோ' வகையிலா 3 கிராம் எடையிலான பேனாக்கள் பல்வேறு வண்ணங்களிலும் இடம்பெற்றிருந்தன. இதன் விலை ரூ.490.
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் பேனாக்களை தாம்பரத்தில் உள்ள பென் ஹவுஸ் பேனா தயாரிப்பு நிறுவனத்தினர் உருவாக்கி உள்ளனர். காஷ்மீரின் குங்குமப் பூ இந்த பேனாவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேக்கு, செம்மரம், உள்ளிட்ட எந்த மரத்தைக் கொண்டும் வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கேற்ப பேனாவை இவர்கள் தயாரித்துக் கொடுக்கின்றனர். இவர்கள் தங்களுடைய பேனா ரகங்களுக்கு 'நயம்', 'தந்தம்', 'குறள்', 'தேசியம்', 'துர்கா', 'வித்ய', 'வெண்மதி', 'தலைவன்' என்றெல்லாம் கூட பெயர் சூட்டி இருக்கின்றனர்.
அரோரா என்பது 1919-இல் தொடங்கப்பட்ட உலகப் புகழ் பெற்ற இத்தாலிய பேனா தயாரிப்பு நிறுவனம். அன்று முதல் இன்றுவரை வட இத்தாலியில் துரின் என்ற இடத்தில் இந்த நிறுவனத் தொழிற்சாலையில் பேனாக்கள் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. பல ஐரோப்பிய நாடுகளின் அதிபர்களும், பிரதமர்களும் அரோரா தயாரிப்பான தங்க நிப் பேனாக்களைத்தான் பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்டு 14 கேரட் தங்க நிப் கொண்ட 68 பேனாக்களைத் தயாரித்து விற்பனை செய்தனர். இதன் விலை ரூ.86 ஆயிரம்.
ஆங்கிலேய அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி போராட்டத்தைத் தொடங்கியபோது, இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இங்க்கைப் பயன்படுத்த விரும்பவில்லை.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சதீஷ் தாஸ் குப்தா என்ற பெங்கால் கெமிகல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பொறியாளரால், காந்திஜிக்காவே பிரத்யேகமான சுதேசி இங்க் 1932-இல் தயாரித்து அளித்தார். பின்னர், அவர் 'கிருஷ்ணதாரா' என்ற பெயரில் இங்க் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். அந்த இங்க்குக்கு 'சுலேகா இங்க்' என்று பெயரிட்டவர் ரவீந்திரநாத் தாகூர். இன்றும் அந்த இங்க் விற்பனையாகிறது.
கையால் வரையப்பட்ட நுட்பமான ஓவியங்களைக் கொண்ட பேனாக்களை புணேவைச் சேர்ந்த 'ஏ அன்டு கோ' என்ற நிறுவனம் தயாரிக்கிறது. கடவுள் உருவங்கள், காதலி உருவம் என வாடிக்கையாளர்களின் விருப்பத்தின்பேரில், இவர்கள் பேனாக்களில் வரைகின்றனர். ஒரு பெரிய நிறுவனத்தினர் தனது 100 முக்கிய வாடிக்கையாளர்கள் அவரவர்கள் ஓவியம் வரையப்பட்ட பேனாக்களை பரிசளிக்க விரும்பி இவர்களை அணுகியபோது, 100 பேரின் ஓவியங்களையும் பேனாக்களில் வரைந்து கொடுத்தனர்.
சென்னை பேனா கண்காட்சியின் சிறப்பாக, 'திருவள்ளுவர் ஓவியம்' கொண்ட பேனாகூட இருந்தது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த கேலிகிராஃபி எனும் சித்திர எழுத்துக் கலை நிபுணரும் பேனாக்கள் பழுது நிபுணருமான சமீர் மேத்தாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து பேனாக்களை அனுப்பி, ரிப்பேர் செய்து தரச் சொல்கின்றனர்' என்கிறார் ஆதித்யா பன்சாலி.
ஓர் அரங்கில் பேனா தயாரிப்பாளர் கூறுகையில், 'ஒரு நாள் ஒரு முன்னாள் ராணுவ அலுவலர் வந்து என்னுடைய தந்தையின் நினைவாக எனக்கு ஒரு பேனா தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறி ஒரு பார்சலைக் கொடுத்தாார். உள்ளே அவருடைய அப்பாவின் எலும்பு. நாங்களும், அவரது கோரிக்கையை ஏற்று அந்த எலும்புத் தூளைப் பயன்படுத்தி பேனா தயாரித்துக் கொடுத்தோம்' என்கிறார்.