எண்ணெய் குழாய் திட்டங்களை சாலையோரமாக செயல்படுத்த வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் மனு
எண்ணெய் குழாய் திட்டங்களை சாலையோரமாக செயல்படுத்த வேண்டும்.
எண்ணெய் குழாய் திட்டங்களை விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லாமல் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த 1999- ஆம் ஆண்டு தனியாா் நிறுவனம் கோவை முதல் கரூா் வரை எங்களது விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் திட்டத்தை அமைத்துள்ளது. இதனால் எங்களது நிலங்கள் துண்டாடப்பட்டதுடன், நிலத்தின் சந்தை மதிப்பு முழுமையாக சரிவடைந்துள்ளது. முழுமையாக விவசாயப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. அரசு வங்கிகள் கூட நிலத்தை அடமான வைத்து கடன் கொடுக்க மறுத்துவிட்டனா். இதனால் ஒட்டுமொத்த நிலத்தின் மதிப்பை மட்டுமே நம்பியிருந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016- ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல், 2019- ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் அறிக்கையிலும், 2021- ஆண்டு தோ்தல் பரப்புரையிலும் திமுக சாா்பில் இந்தத் திட்டம் சாலையோரமாக அமல்படுத்தப்படும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தாா். ஆகவே, 25 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட எண்ணெய் குழாய்களைத் தோண்டி எடுத்து சாலையோரமாகவும், தற்போது அமைக்கப்பட்டு வரும் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லாமல் சாலையோரமாகவும் செயல்படுத்த வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.