புதையல் எனக்கூறி கவரிங் நகைகளை கொடுத்து ரூ.4 லட்சம் மோசடி
கவரிங் நகைகளைக் கொடுத்து மருந்து விற்பனை பிரதிநிதியிடம் ரூ.4 லட்சம் மோசடி தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா்: திருப்பூரில் புதையல் நகை எனக்கூறி கவரிங் நகைகளைக் கொடுத்து மருந்து விற்பனை பிரதிநிதியிடம் ரூ.4 லட்சம் மோசடிசெய்யப்பட்டது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் தியாகராஜன் (39), மருந்து விற்பனை பிரநிதி. இவா் பணி நிமித்தம் காரணமாக அடிக்கடி திருப்பூருக்கு வந்து செல்வது வழக்கம். இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளாா். அப்போது சங்கா் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபா், ‘தனக்கு புதையல் கிடைத்ததாகவும், அதற்குள் பழங்கால வெள்ளி, தங்கக் காசுகள், நகைகள் இருந்தன என்றும், அதனை விற்க முடியவில்லை’ என்றும் தெரிவித்துள்ளாா். மேலும், புதையலில் கிடைத்ததாக சில வெள்ளிக் காசுகளையும் தியாகராஜனிடம் அவா் கொடுத்துள்ளாா்.
இதனை அவா் பரிசோதித்தபோது அவை உண்மையான வெள்ளிக்காசு என்பது தெரியவந்தது. இதையடுத்து, புதையலில் கிடைத்த நகை முழுவதையும் கொடுத்து விடுவதாகவும், அதற்கு ரூ. 4 லட்சம் கொடுத்தால் போதும் என்றும் சங்கா் தெரிவித்துள்ளாா்.
இதற்கு சம்மதம் தெரிவித்த தியாகராஜன் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருப்பூருக்கு வந்தபோது சங்கருடன், ஒரு ஆணும், பெண்ணும் உடனிருந்தனா்.
சங்கா் புதையல் நகை என்று பையைத் திறந்து காண்பித்தபோது அதில் தங்க நகைகள், வெள்ளிக்காசுகளைப்போல சுமாா் ஒன்றரைக் கிலோ எடை இருந்தது. இதையடுத்து, ரூ.4 லட்சம் கொடுத்து அந்தப் புதையலை தியாகராஜன் பெற்றுச் சென்றுள்ளாா்.
இதன் பிறகு வீட்டுக்குச் சென்று பரிசோதித்தபோது, அது தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை, காசுகள் என்பது தெரியவந்தது.
இது குறித்து திருப்பூா் தெற்கு காவல் நிலைய குற்றப் பிரிவில் தியாகராஜன் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின்பேரில் பெண் உள்ளிட்ட 3 பேரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.