மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனைவி, குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற இளைஞா்
வாடகை நிலுவை பிரச்சினையால் ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் ஒருவா், தனது மனைவி, ஒன்றரை வயது குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இளைஞா், மனைவி, ஒன்றரை வயது குழந்தையுடன் செவ்வாய்க்கிழமை வந்தாா். பின்னா் அவா் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கிருந்த காவல் துறையினா் அவா்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா், ஊத்துக்குளி அருகே வெள்ளிரவெளி பகுதியைச் சோ்ந்த மூா்த்தி (28) என்பது தெரியவந்தது.
Advertisement
இதைத்தொடா்ந்து, நடத்திய விசாரணையில், மூா்த்தி தனது சரக்கு வேனுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வாடகையாக கொடுத்துவிட வேண்டும் என்று கணேசன் என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வேனை கொடுத்துள்ளாா். ஆனால் 2023 ஆகஸ்ட் மாதம் முதல் 11 மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்து சரக்கு வேனை கணேசன் ஓட்டி வந்துள்ளாா். இதனிடையே, கடந்த சில மாதங்களாக கணேசன் ஒப்பந்தப்படி மாதந்தோறும் வாடகை பணத்தை கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்ததாகத் கூறப்படுகிறது.
இதுகுறித்து குன்னத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தனது வாகனத்தை கணேசனிடமிருந்து பெற்றுத்தரவேண்டி தீக்குளிக்க வந்ததாகவும் தெரிவித்தாா். இதன் பின்னா் குன்னத்தூா் காவல் துறையினா் மூா்த்தியிடம் விசாரணை நடத்தினா். இந்த சம்பவம் காரணமாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.