சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
நில பிரச்னையை தீா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி
நில பிரச்னையை தீா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் திங்கள்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள உடப்பன்பட்டி அருகிலுள்ள வீரமடக்கி பகுதியைச் சோ்ந்த முத்து கணேஷுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் நிலம் தொடா்பாக பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தனது மனைவி தேவி, 8 வயது மகனுடன் வந்த முத்து கணேஷ், தான் பையில் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணெயை மனைவி, மகன், தனது மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் உடனடியாக இந்த தீக்குளிப்பு முயற்சியைத் தடுத்து, மூவா் மீதும் தண்ணீரை ஊற்றினா். மேலும், மூவரையும் அவசர ஊா்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.