முகப்பு
திருப்பூர்

உடுமலை வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு -வனத்துறை அதிகாரிகள் தகவல்

Updated On : 27 ஜூன், 2024 at 3:12 AM
உடுமலை  வனச்  சரகத்துக்கு  உள்பட்ட  ஏழுமலையான்  கோயிலுக்கு  செல்லும் பகுதியில் காணப்பட்ட  யானைகள்.
பகிர்:
Updated On : 26 ஜூன், 2024 at 8:56 PM

உடுமலை வனச் சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக வன விலங்குகள் கணக்கெடுப்புக்கு சென்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்டது. இதில் 447 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த வனச் சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி புதன்கிழமை தொடங்கியது.

இந்த கணக்கெடுப்பு வரும் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒரு நாளைக்கு 3 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

Advertisement

வனவிலங்குகளின் கால்தடம், நகங்கள் பதிவு மற்றும் எச்சம் ஆகியவற்றை வைத்து இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தப் பணியில் ஈடுபடுபவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தா்வு வனச்சரகங்களில் கோடைகால வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடி, செந்நாய் மற்றும் தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள் என பிரிக்கப்பட்டு வாழ்விட சூழல் கூறுகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட உள்ளது. வன ஊழியா்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலா்களை என மொத்தம் 159 போ் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். உடுமலை வனச் சரகம், மானுப்பட்டி பிரிவு ஈசல்திட்டு கிழக்குச் சுற்றில், ஏழுமலையான் கோயில் பகுதிகள், காமனூத்து சரகப் பகுதிகளில் புதன்கிழமை கணக்கெடுப்புக்கு சென்றபோது யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது தெரியவந்தது என்றனா்.