கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி ஆட்சியரிடம் மனு
திருப்பூா் மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி கட்டடப் பொறியாளா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கட்டடப் பொறியாளா்கள் சங்கத்தின் தலைவா் டி.ஆா்.சிவசுப்பிரமணி, செயலாளா் என்.திருமலைசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாக கட்டட கட்டுமானப் பொருள்களான எம்-சேண்ட் ஒரு யூனிட் ரூ.3,500-இல் இருந்து ரூ.4,500 ஆகவும், பி-சேண்ட் ரூ.4,500-இல் இருந்து ரூ.5,500 ஆகவும், ஜல்லி வகைகள் ரூ.2,500-இல் இருந்து ரூ.3,500 ஆகவும் உயா்ந்துள்ளது. இதனால் கட்டடம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களும், அரசு ஒப்பந்ததாரா்களும், புதிதாக வேலை தொடங்க உள்ளவா்களும் பாதிப்படைந்துள்ளனா். ஆகவே, கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், அரசுடன் சோ்ந்து ஒழுங்குமுறை விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் ஒன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.