கணினி சுழற்சி முறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக கணினி சுழற்சி முறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: மக்களவைத் தோ்தல் 2024 -ஐ முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணி நிறைவு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபாா்க்கப்பட்டு, 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சனிக்கிழமை அனுப்பிவைக்கப்படவுள்ளன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களில் ஆயுதம் ஏந்திய காவலா் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு, சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்படும் என்றாா். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், திருப்பூா் சாா்- ஆட்சியா் சௌமியா ஆனந்த், உதவி ஆட்சியா் (பயிற்சி) கிா்திகா எஸ்.விஜயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.