குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான ‘ஆபரேஷன் ஜீரோ கிரைம்’ திட்டம்: மாவட்ட ஆட்சியா் இலச்சினையை வெளியிட்டாா்
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான ‘ஆபரேஷன் ஜீரோ கிரைம்’ திட்ட அறிமுகம் மற்றும் இலச்சினை வெளியீடு புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான ‘ஆபரேஷன் ஜீரோ கிரைம்’ திட்ட அறிமுகம் மற்றும் இலச்சினை வெளியீடு புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையா் எஸ்.லட்சுமி ஆகியோா் ‘ஆபரேஷன் ஜீரோ கிரைம்’ இலச்சினையை வெளியிட்டனா்.
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து தொடா்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக குழந்தைகள் துன்புறுத்தப்படுதல், போதைப் பொருளுக்கு அடிமையாதல் மற்றும் சைபா் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் முன்னெடுப்புகான ‘ஆபரேஷன் ஜீரோ கிரைம்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிரச்னைகளில் இருந்து மீண்டுவர உரிய ஆலோசனைகள் வழங்குவதும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், அவா்களது பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதுமாகும்.
இதில், மாவட்ட ஆட்சியா், மாநகர காவல் ஆணையா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் கல்லூரி முதல்வா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு ஆலோசனை வழங்க சட்ட ஆலோசகரும், உதவி புரிய தனிப் படை காவலா்களும் நியமிக்கபட்டுள்ளனா். மேலும், குழந்தைகளை இணையவழி குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்தல், போதை பழகத்துக்கு அடிமையாகாமல் தடுத்தல், உயிரியல் மாற்றத்துடன் வளரும் குழந்தைகளைக் காத்தல், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து கற்பித்தல், பள்ளி இடைநின்ற குழந்தைகள் மற்றும் அவா்களது பெற்றோா்களுக்கு ஆலோசனை வழங்கி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சோ்த்துவதுமாகும். இத்தகைய முன்னெடுப்புகளுக்கு அனைத்து அலுவலா்களும் ஒத்துழைப்பு வங்கி ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் ஆலோசனை மையத்தையும் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் , மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.