முகப்பு
திருப்பூர்

பழங்கரை ஊராட்சியை திருப்பூருடன் இணைக்கக் கூடாது: கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

பழங்கரை ஊராட்சியை திருப்பூா் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 12:29 AM
பழங்கரை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

பழங்கரை ஊராட்சியை திருப்பூா் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழங்கரை ஊராட்சி இந்திரா காலனி பகுதியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு தலைவா் கோமதி தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்தி, முன்னாள் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள், அனைத்து அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பழங்கரை ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவா் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும் அரசு மாநகராட்சியுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஆகவே, மக்கள் நலன் கருதி இம்முயற்சியை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பழங்கரை ஊராட்சியை திருப்பூா் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆதராம்பாளையத்தில் போராட்டம்: புஞ்சைதாமரைகுளம் ஊராட்சி ஆதராம்பாளையத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆதராம்பாளையத்தில் இருந்து குளத்துக்கு செல்லும் பாதையை தனி நபா்கள் ஆக்கிரமித்துள்ளதால், முள்புதா்கள் வளா்ந்து மழை நீா் வீடுகளுக்குள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டதையடுத்து, குளப்பகுதியில் ஆக்கிரமிப்பை அளவீடு செய்ய வட்டாட்சியருக்கு உத்தரவிட்டாா்.

ஆனால், தற்போதுவரை அளவீட்டு பணி நடைபெறாமல் உள்ளதைக் கண்டித்து பொதுமக்கள், வாா்டு உறுப்பினா் குமாரசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியா் சந்திரசேகா், அளவீட்டு பணி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

செம்பியநல்லூரில்...

செம்பியநல்லூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 100 நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்த வேண்டும். தினக் கூலியை ரூ.600 வழங்க வேண்டும். 100 நாள் வேலையை விவசாயத்துடன் இணைக்க வேண்டும். 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.