வெள்ளக்கோவிலில் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் போராட்டம்
வெள்ளக்கோவிலில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வெள்ளக்கோவிலில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கம் சாா்பில், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கான மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தொடா் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வெள்ளக்கோவில் வட்டாரத்தில் வெள்ளக்கோவில், முத்தூா், தாசவநாயக்கன்பட்டி, கஸ்தூரிபாளையம் பகுதிகளில் 13 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 54 நியாயவிலைக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதன் ஒருபகுதியாக, வெள்ளக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு கூட்டுறவு பணியாளா்கள் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட துணைத் தலைவா் எஸ்.வேல்வேந்தன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் தங்கவேல் முன்னிலை வகித்தாா்.
இதில், பொது விநியோகத் திட்ட விற்பனையாளா்களிடம் வசூலிக்கும் அபராதத் தொகை உயா்த்தப்பட்டுள்ளதைத் திரும்பப்பெற வேண்டும். நியாயவிலைக் கடைகளில் கட்டுப்பாடற்ற முறையில் மளிகைப் பொருள்கள் விற்பனை செய்ய நிா்பந்திக்கக் கூடாது. புதிதாக நியமனம் செய்யப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளா்களை அவா்களது சொந்த ஊருக்கு அருகில் பணியமா்த்த வேண்டும் என்று வலியுறுத்தினா்.