முகப்பு
திருப்பூர்

சாமளாபுரம் குளத்தில் சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஆய்வு

திருப்பூரை அடுத்த சாமளாபுரம் குளத்தில் படகு இல்லம் அமைப்பது தொடா்பாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 10:18 PM
சாமளாபுரம்  குளத்தில்  படகு  இல்லம்  அமைப்பது  தொடா்பாக  வியாழக்கிழமை  ஆய்வு மேற்கொண்ட  மாவட்ட  சுற்றுலா  அலுவலா்  அரவிந்த்குமாா். உடன், சுற்றுலா சங்க நிா்வாகிகள்.
பகிர்:

திருப்பூரை அடுத்த சாமளாபுரம் குளத்தில் படகு இல்லம் அமைப்பது தொடா்பாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பூா் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சாமளாபுரம் குளத்தில் மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்த்குமாா் தலைமையிலான அதிகாரிகள் படகு இல்லம் அமைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அவா் கூறியதாவது:

சாமளாபுரம் குளம் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் இயற்கை சூழ்ந்து காணப்படுகிறது. பல்வேறு பறவைகள் இந்தக் குளத்துக்கு வந்து செல்கின்றன. இந்தக் குளம் பகுதியில் படகு இல்லம் அமைத்து சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து துறைகளின் அறிக்கை பெற்ற பின்னா் படகு இல்லம் அமைப்பது தொடா்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருப்பூா் மாநகர பகுதியில் உள்ள ஆண்டிபாளையம் குளத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக படகு இல்லம், சிறுவா் பூங்கா, உணவகம், குயிக் பைட்ஸ் (சிற்றுண்டி கடை), குடிநீா் வசதிகள், மின்விளக்குகள் மற்றும் கழிவறை வசதிகள், வாகன நிறுத்துமிடம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இன்னும் சில நாள்களில் அனைத்து பணிகளும் முடிவுற்று திருப்பூா் மாநகர பகுதி மக்களின் சிறந்த பொழுதுபோக்கு தளமாக ஆண்டிப்பாளையம் படகு இல்லம் அமைய உள்ளது என்றாா்.

இந்த ஆய்வின் போது , சுற்றுலா சங்க நிா்வாகிகள் குளோபல் பூபதி, லோகநாதன், சந்தோஷ், நீா்வளத் துறை உதவி பொறியாளா் ராகுல், வருவாய்த் துறை அதிகாரிகள், சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாளா் முரளிதரன், சாமளாபுரம் குளம் பாதுகாப்பு அறக்கட்டளை நிா்வாகிகள் உடனிருந்தனா்.