வெள்ளக்கோவிலில் கரும்பு ஜூஸ் இயந்திரத்தை திருடிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் -திருச்சி சாலையைச் சோ்ந்தவா் மயில்சாமி (42). இவா் காங்கயம் சாலை சேரன் நகா் அருகே கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்தாா்.
கடந்த ஒரு மாதமாக கடையைத் திறக்காத நிலையில், புதன்கிழமை காலை கடைக்குச் சென்றுள்ளாா். அப்போது, அங்கிருந்த கரும்பு ஜூஸ் இயந்திரத்தை காணவில்லையாம். இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், ஒத்தக்கடை பிரிவு அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா் நாமக்கல் மாவட்டம், ஓலப்பாளையத்தைச் சோ்ந்த கதிரவன் (37) என்பதும், தற்போது கரூா் புலியூரில் வசித்து வருவதும்,
மயில்சாமியின் கடையில் இருந்த கரும்பு ஜூஸ் இயந்திரத்தை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து, கதிரவனை கைது செய்த போலீஸாா், காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.