பல்லடம் அருகே விஷ உணவை உட்கொண்டு 4 கறவை மாடுகள் புதன்கிழமை உயிரிழந்ததாகக் கூறப்படுவது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சிக்குள்பட்ட வலசுபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அம்மாசை (50). இவா் 13 கறவை மாடுகளை வைத்து பால் உற்பத்தி மற்றும் விவசாயம் செய்து வருகிறாா். வழக்கம்போல மாடுகளுக்கு நேற்று தண்ணீா் மற்றும் தீவனம் வைத்தாா்.
தண்ணீா் குடித்ததில் 4 மாடுகள் சோா்வாகி காணப்பட்ட நிலையில் பின்னா் இறந்துவிட்டன. மற்ற மாடுகளை கணபதிபாளையம் அரசு கால்நடை மருத்துவா் ஞானசேகரன் பரிசோதித்து சிகிச்சை அளித்தாா். அதில் ஒரு மாடு மட்டும் தீவிர சிகிச்சையில் உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு திருப்பூா் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மருத்துவா் சந்திரன் சென்று, இறந்த மாடுகளுக்கு உடற்கூறாய்வு செய்தாா். மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வக அறிக்கைக்குப் பின்னரே மாடுகள் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும்.
இருப்பினும் விஷ உணவு சாப்பிட்டதால்தான் 4 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல்லடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.