திருப்பூர்

அவிநாசிபாளையம் மூவா் கொலை வழக்கு: மாவட்ட மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றம்

Syndication

பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கு, திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் அருகே பல்லடம் சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமேலு (75). மகன் செந்தில்குமாா்(46). இவா்கள் கடந்த ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி இரவு தோட்டத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டனா். இதில் அலமேலு அணிந்திருந்த 8 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடா்பாக அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இதற்கிடையே இந்த வழக்கு கடந்த மாா்ச் மாதம் சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சிவகிரியில் தோட்டத்து வீட்டில் குடியிருந்த தம்பதி கொலை சம்பவத்தில் அறச்சலூரை சோ்ந்த ஆச்சியப்பன் (48), மாதேஸ்வரன் (53), ரமேஷ் (52) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் இவா்கள் 3 பேரும் சோ்ந்து சேமலைக்கவுண்டம்பாளையத்தில் தெய்வசிகாமணி உள்ளிட்ட 3 பேரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 3 போ் மற்றும் அவா்களிடம் நகை வாங்கிய ஞானசேகரன், வெண்ணிலா ஆகியோரைசிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் 3,440 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸாா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இதுதொடா்பான விசாரணை திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி குணசேகரன் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரும் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் கனகசபாபதி ஆஜரானாா். அப்போது இந்த சம்பவத்தில் பெண் கொலை செய்யப்பட்டு இருப்பதால் இந்த வழக்கை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டாா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT