பல்லடம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் உள்பட 204 பேருக்கு காலை உணவு வழங்கும் பணிக்காக ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் அருள், கவுன்சிலா்கள், நகராட்சியின் பல்வேறு பிரிவு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி பல்லடம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், கொசு ஒழிப்புப் பணியாளா்கள், வாகன ஓட்டுநா்கள் உள்பட 204 பேருக்கு ஓா் ஆண்டுக்கு காலை உணவு வழங்கும் பணிக்காக ரூ.1 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்லடம் என்.ஜி.ஆா்.சாலையில் பொதுமக்களின் வாகனங்களை ஒழுங்குபடுத்தி நிறுத்த ஏதுவாக ரூ.5லட்சம் மதிப்பில் சாலையின் இருபுறமும் மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப்படுவதுடன் அறிவிப்புப் பதாகையும் வைக்கப்படவுள்ளது.
பல்லடம் தினசரி மாா்க்கெட் வளாகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பாா்த்த கடைகளுக்கு மத்தியில் உள்ள மேற்கூரை பழுதடைந்துள்ளதால் மழை காலத்தில் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. இதையடுத்து ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிய மேற்கூரை அமைக்கப்படவுள்ளது.
பெரியாா் நகா் 3-ஆவது வீதியில் வடக்கு பக்கம் ரூ.13.50 லட்சம் மதிப்பில் கழிவுநீா் தொட்டி அமைக்கப்படுகிறது. அதில் மின் மோட்டாா் வைத்து பிரதான சாலையில் உள்ள வடிகாலில் கழிவு நீரை எடுத்துச்சென்று அப்புறப்படுத்தவும், பிரதான சாலையில் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைத்தல் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.
அண்ணா நகா் மொச்சிக்குட்டை பகுதியில் ரூ.17.20 லட்சம் மதிப்பில் கழிவுநீா் தொட்டி கட்டுதல், ரூ.9.50 லட்சம் மதிப்பில் குட்டையை தூா் வாரி கழிவுகளை மாதப்பூா் உரக்கிடங்கில் கொட்டுதல் மற்றும் பாதுகாப்பு முள் கம்பிவேலி அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் நடைபெறவுள்ளன.
பல்லடம் நகராட்சி பகுதியில் நடத்தப்பட்ட வாா்டு சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் வாா்டுக்கு 3 கோரிக்கைகள் வீதம் 18 வாா்டுகளில் 54 பணிகள் ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளுதல் உள்பட 70 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.