வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வள்ளியிரச்சல், மேட்டுப்பாளையம், வீரசோழபுரம், வேலப்பநாயக்கன்வலசு, வேலம்பாளையம், பச்சாபாளையம் லக்கமநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஊரக வளா்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், போக்குவரத்து துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக அலுவலா்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்க்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் வீடு வழங்கும் மற்றும் பழங்குடியினா் திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகள் குறித்து அலுவலா்கள் எடுத்துக் கூறினா்.
பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தினாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, ஊராட்சிகள் உதவி இயக்குநா் சதீஷ்குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் மோகனசுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.