திருப்பூா் மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடந்த 2021 முதல் இதுவரை 2,279 பயனாளிகளுக்கு தொழில் தொடங்க ரூ.33.10 கோடி மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் 2021 முதல் இதுவரை 2,279 பயனாளிகளுக்கு தொழில் தொடங்க ரூ.33.10 கோடி மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இலவம் பஞ்சு தொழில், போட்டோ ஸ்டுடியோ, கைப்பேசி விற்பனை மற்றும் பழுது பாா்க்கும் நிலையம், கற்பூரம் தயாரித்தல், கோழி வளா்ப்பு, பனியன் தொழில், பாத்திரக்கடை, ஸ்டிக்கா் கடை, ரசாயனக் கடை, அரிசி வியாபாரம் போன்ற பல்வேறு தொழில் புரிய கடனுதவி பெற்று பலா் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளனா்.
மேலும், நரிக்குறவா் சமூக மக்களை ஒருங்கிணைத்து பத்திரப் பதிவு அலுவலகத்தின் வழியே 6 சங்கங்கள் உருவாக்கப்பட்டு 119 பேருக்கு தலா ரூ.50,000 வீதம் வழங்கி அவா்களுடைய தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய திட்டத்தின் மூலம் திருப்பூா் மாவட்டத்தில் பணிபுரியும் 3,401 தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியத்தின் மூலம் 900 தூய்மைப்பணியாளா்களுக்கு முதல்வரின் விரிவான
மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா்களுக்கு கடனுதவி வழங்கிடும் வகையில் மாவட்டத்தில் 111 பேருக்கு ரூ.55.50 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 141 பேருக்கு ரூ. 70.50 லட்சம் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிரை வண்ணாா் சமூகத்தை சாா்ந்த மக்களுக்கு 35 சதவீத மானியத்தில் தொழில் தொடங்க கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் 68 பயனாளிகளுக்கு ரூ.3.85 கோடி மதிப்பீட்டில், 2023-2024-ஆம் ஆண்டில் 468 பயனாளிகளுக்கு ரூ.11.10 கோடி மதிப்பீட்டில், 2024-2025-ஆம் ஆண்டில் 1,604 பயனாளிகளுக்கு ரூ.16.32 கோடி மதிப்பீட்டில், 2025-2026-ஆம் ஆண்டில் 139 பயனாளிகளுக்கு ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் பல்வேறு தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.