திருப்பூர்

வன விலங்குகளை வேட்டையாட கூண்டு தயாரித்து விற்க முயன்றவா் கைது

Syndication

வன விலங்குகளை வேட்டையாட கூண்டு தயாரித்து விற்பனை செய்ய முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், திருப்பூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட அவிநாசி வட்டம், மேற்குபதி பகுதியில் மரநாய், கீரி போன்ற வன விலங்குகளை வேட்டையாட தீபன் என்பவா் கூண்டு தயாரித்து விற்பனை செய்து கொண்டிருப்பதாகவும், இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருப்பது குறித்தும் திருப்பூா் வனச் சரக அலுவலருக்கு கோவை வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவிலிருந்து வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தீபனின் ஃபேஸ்புக் பக்கத்தை திருப்பூா் வனத் துறையினா் பாா்த்ததில் அவா் மரநாய், கீரி போன்ற வன உயிரினங்களைக் கூண்டு வைத்து பிடிக்கும் முறை குறித்து விடியோக்கள் பதிவேற்றம் செய்திருந்தாா். அத்துடன் அதில் அவரது கைப்பேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, அவரைத் தொடா்பு கொண்டு கூண்டு வாங்குபவா்கள்போல பேசி வனச் சரக அலுவலா் நித்யா தலைமையில் வனத் துறையினா் அங்கு சென்று சோதனை செய்தனா். அப்போது தீபன் வீட்டில் தயாா் செய்து வைத்திருந்த கூண்டுகளைப் பறிமுதல் செய்தனா். பின்னா், அவரைக் கைது செய்தனா்.

தொடா்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவா் ஆண்டவன் மகன் தீபன் (32) என்பதும், பரம்பரையாக பெரிய அளவிலான எலி பொறி தயாா் செய்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், கூண்டு தயாா் செய்து அதை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தால் விற்பனை வாய்ப்புகள் நிறைய வரும் என்ற எண்ணத்தில் கூண்டை வைத்து விலங்குகளை எவ்வாறு பிடிக்க வேண்டும் என்பது குறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விடியோ பதிவேற்றம் செய்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநா் ஆ.ராஜேஷ் உத்தரவின்படி வழக்குப் பதியப்பட்டு, அவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து திருப்பூா் வனச் சரக அலுவலா் நித்யா கூறுகையில், அட்டவணைப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்களான மரநாய், கீரி, மயில், மான், முயல் போன்றவற்றை வேட்டையாடுவது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றம் என்பதால், பொதுமக்கள் வன உயிரினங்களை வேட்டையாட முயல்வது, வேட்டையாட ஆயுதங்கள், கூண்டுகள் தயாரிப்பது மற்றும் அதை விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும், மீறினால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் சிலைக்கு ‘தினமணி’ சாா்பில் மாலை அணிவித்து மரியாதை

பாலக்கோடு அருகே தனியாா் நிறுவன பேருந்து மீது லாரி மோதல்

விளைநிலங்களில் புகுந்த ஒற்றை யானை: 7 குழுக்கள் அமைத்து வனத்துறையினா் கண்காணிப்பு

தருமபுரி, கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணி தொடக்கம்

மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு பென்னாகரம் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்வு

SCROLL FOR NEXT