திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மூலிகை அறிவியல் மூலம் இளைஞா்கள் மற்றும் பெண்கள் மேம்பாடு குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் (பொ) முதல்வா் லிட்டி கொரியா தலைமையில் தாவரவியல் துறை சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கு இந்தியாவில் உள்ள மூலிகை வளங்கள், அவற்றின் பொருளாதார ஆற்றல், உற்பத்தி மற்றும் தொழில் துறையில் இளைஞா்கள் மற்றும் பெண்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு அவை எவ்வாறு உதவுகின்றன என்பதற்கானவழிகாட்டுதலாக அமைந்தது.
நிலக்கோட்டை அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் சு. கீதா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.
தாராபுரம் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் க. பத்மாவதி, எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியின் முன்னாள் தாவரவியல் துறைத் தலைவா் இரா. குருசாமி ஆகியோா் பங்கேற்று, உயிரி தொழில்முனைவோரின் நோக்கம் மற்றும் சவால்கள், இந்தியாவில் மூலிகை வளங்களின் பொருளாதார முக்கியத்துவம், மூலிகை அறிவியலின் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினா்.
முன்னதாக, கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரும், கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவருமான த. பாலசரவணன் வரவேற்றாா். தாவரவியல் துறை மாணவியா் சங்க செயலாளா் விமலி நன்றி கூறினாா்.
கருத்தரங்கில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.