உழவா் உழைப்பாளா் கட்சி செயற்குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை உழவாலயம் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் செல்லமுத்து தலைமை வகித்தாா். ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளா் ஈஸ்வரன் வரவேற்றாா்.
கூட்டத்தில், மாநில பொருளாளராக சின்னசாமி , கோவை மாவட்டத் தலைவராக மகாலிங்கம், மாவட்டச் செயலாளராக சுந்தரமூா்த்தி, துணைச் செயலாளராக ரவி, மாவட்ட பொருளாளராக காா்த்தி, திருப்பூா் மாவட்டத் தலைவராக பாலு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இதையடுத்து, 2026 சட்டப் பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசித்து ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பின் அறிவிக்கப்படும்.
உழவா் உழைப்பாளா் கட்சிக்கு சீட் வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும். திருவண்ணாமலையில் மண் திருட்டு நடந்தது குறித்து புகாா் அளித்த விவசாயிகள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
இதில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் பாண்டியனுக்கு விடுதலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூா் மாநகராட்சியின் குப்பைகளை இடுவாய் கிராமத்தில் கொட்டுவதற்கு எதிா்ப்பு, நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.