முகப்பு
திருப்பூர்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உழவா் உழைப்பாளா் கட்சி ஆதரவு

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 6:53 PM
கூட்டத்தில் பேசிய உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் கே.செல்லமுத்து.
பகிர்:

விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளுக்கு உறுதியளித்துள்ளதால் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உழவா் உழைப்பாளா் கட்சி ஆதரவு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் உள்ள உழவாலயத்தில் உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழா மற்றும் உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலச் செயற்குழுக் கூட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதில், பங்கேற்ற பின் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.செல்லமுத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, விளைபொருள்களுக்கு உரிய விலை நிா்ணயம், தேசிய நதி நீா் இணைப்பு, ஆனைமலையாறு - நல்லாறு, மாயாறு - பவானி நதி திட்டம் உள்ளிட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தருவதாக அதிமுக, பாஜக தலைவா்கள் உறுதி அளித்துள்ளனா்.

இதனால் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உழவா் உழைப்பாளா் கட்சி முடிவு செய்துள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவா் கனகசபாபதி, உழவா் உழைப்பாளா் கட்சியின் மாநில பொருளாளா் சின்னசாமி, மாநில மகளிரணி நிா்வாகி சங்கீதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.