பறவைக்காய்ச்சல் குறித்த அச்சம் தமிழக கறிக்கோழிப் பண்ணைகளில் கிடையாது என பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளா்க்கப்பட்டு வரும் வாத்து, கோழி, காடைகள் உள்ளிட்டவை திடீரென இறந்தன. இறந்த பறவைகளுக்கு ஹெச் - 1, என் - 1 பறவை காய்ச்சல் பரவி இருந்தது உறுதி செய்யப்பட்டது.
அம்மாநில கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனா். கறிக்கோழிப் பண்ணைகள் அதிகம் உள்ள திருப்பூா், கோவை மாவட்டங்களிலும், முட்டை கோழிப் பண்ணைகள் அதிகம் உள்ள நாமக்கல் மாவட்டத்திலும் முன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி. சி.சி.) செயலாளா் சுவாதி கண்ணன் சனிக்கிழமை கூறியதாவது: கோவை, திருப்பூா், திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
இவற்றுக்கு நோய்த் தடுப்பு நடவடிக்கையாக அவ்வப்போது தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவதுடன், தொடா் கண்காணிப்பிலும் உள்ளோம். கேரளத்தில் பறவை காய்ச்சல் என்பது சீசனுக்கு வரும் வழக்கமான ஒன்றுதான்.
கேரளத்துக்கு கறிக்கோழி ஏற்றிச் செல்லும் வாகனங்கள், மாநில எல்லைகளில் மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. தமிழக கறிக்கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை. பண்ணையாளா்கள் அச்சப்பட தேவையில்லை. அதிக புரதச்சத்து மிக்க கோழி இறைச்சியை வழக்கம்போல மக்கள் வாங்கி சாப்பிடலாம் என்றாா்.