கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றுமுதல் (ஜன.1) உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளா் மகாலிங்கம் புதன்கிழமை கூறியதாவது: கறிக்கோழிக்கு வளா்ப்பு கூலியாக கிலோவுக்கு ரூ.20, நாட்டுக்கோழிகளுக்கு ரூ.25, காடை கோழிகளுக்கு ரூ.7 கூலி உயா்த்தி வழங்க வேண்டுமென தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கால்நடைத் துறை இயக்குநா் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் முழுமையான உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெறும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் கோழிக் குஞ்சுகளை வாங்க மாட்டாா்கள்.
உற்பத்தி நிறுவனங்கள் கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகளுடன் முத்தரப்பு பேச்சு நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.
சபரிமலை சீசன் முடிவடையவுள்ள நிலையில் இனிமேல்தான் கறிக்கோழி விற்பனை அதிகரிக்கும். இந்நிலையில், கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகளின் போராட்டத்தால், பண்ணைகளில் கோழி உற்பத்தி தடைபடுவதுடன், வரத்து குறைவால் பற்றாக்குறை ஏற்பட்டு கறிக்கோழிகளின் விலை உயர வாய்ப்புள்ளது.