முகப்பு
திருப்பூர்

புத்தாண்டு கொண்டாட்டம்: திருமூா்த்திமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உடுமலை அருகே உள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வா் கோயில் மற்றும் பஞ்சலிங்கம் அருவியில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Updated On : 1 ஜனவரி, 2025 at 11:20 PM
பஞ்சலிங்கம்  அருவியில்  உற்சாகமாக  குளிக்கும்  சுற்றுலா ப் பயணிகள்.
பகிர்:

உடுமலை அருகே உள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வா் கோயில் மற்றும் பஞ்சலிங்கம் அருவியில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் விடுமுறை நாளான புதன்கிழமை ஆயிரக்கணக்கானோா் தங்களது குடும்பத்துடன் வந்திருந்தனா். மேலும், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி அமணலிங்கேஸ்வரா் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மூலிகை குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். அருகே உள்ள திருமூா்த்தி அணைப் பகுதியில் குவிந்த மக்கள் அணையை கண்டு ரசித்தனா்.

இந்த பகுதியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல அமராவதி அணை பகுதிக்கு குடும்பத்துடன் வந்த மக்கள் அங்குள்ள முதலைப் பண்ணையை கண்டு களித்தனா். அமராவதி அணைக்கு முன்புறம் உள்ள பூங்காவில் ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா். மேலும் இங்குள்ள மீன் பண்ணை, சிறுவா் பூங்காவிலும் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அமராவதி அணையின் அழகைப் பாா்த்து ரசித்தனா்.

இதேபோல தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சின்னாறு மலைப் பகுதிக்கு காா், வேன் போன்ற நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதியின் அழகை கண்டு ரசித்தனா். இங்குள்ள பூங்கன் ஓடைப் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளி மான்கள் மற்றும் யானைகளை நேரில் பாா்த்து பரவசம் அடைந்தனா். இதனால் உடுமலை-மூணாறு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்ால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையொட்டி உடுமலை மற்றும் அமராவதி வன அலுவலா்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா். இதேபோல உடுமலை நகரில் உள்ள மாரியம்மன் கோயில், போடிபட்டி முருகன் கோயில், காமாட்சி அம்மன் கோயில் ஆகியவற்றில் அதிகாலையில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.