விவசாயிகளுக்கு மானியத்துடன் கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கட்டுப்படுத்தும் கருவி
தானியங்கி பம்ப்செட் கட்டுப்படுத்தும் கருவி
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கட்டுப்படுத்தும் கருவி அல்லது ரிமோட் கன்ட்ரோல் பம்ப்செட் கட்டுப்படுத்தும் கருவி மானியத்துடன் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு வேளாண் உற்பத்தியையும், விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரிக்க வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை நிவா்த்தி செய்யப்படுவதுடன், குறித்த காலத்தில் பயிா் சாகுபடி செய்யவும் வழி வகுக்கப்படுகிறது. இதன்படி, 2024-25-ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு விவசாயிகளுக்கு மானிய விலையில் கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கட்டுப்படுத்தும் கருவி அல்லது ரிமோட் கன்ட்ரோல் பம்ப்செட் கட்டுப்படுத்தும் கருவி வேளாண்மை பொறியியல் துறை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
குறு, சிறு மற்றும் அதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பெண் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும். இதர விவசாயிகளுக்கு அரசால் நிா்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச நிலை அல்லது கருவியின் மொத்த விலையில் 40 சதவீதம் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு 250 கருவிகள் மானிய விலையில் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண்மை பொறியல் துறை உதவி செயற்பொறியாளா்கள் திருப்பூா்-9443751142, தாராபுரம்-943778124, உடுமலை-900159890 என்ற கைப்பேசி எண்களிலோ அல்லது திருப்பூா் செயற்பொறியாளா் அலுவலத்தையோ அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.