முகப்பு
திருப்பூர்

ரூ.1.31 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்

ரூ.1.31 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

Updated On : 3 ஜனவரி, 2025 at 12:14 AM
வீரசோழபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
பகிர்:

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.31 கோடி மதிப்பில் முடிவுற்ற மற்றும் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். வள்ளியிரச்சல் ஊராட்சி புளியங்காட்டுப்புதூரில் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடம், கணபதிபாளையத்தில் ரூ. 33 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற கட்டடம், வீரசோழபுரத்தில் ரூ. 24 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற கட்டடம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை அமைச்சா் திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, வீரசோழபுரத்தில் 173 பயனாளிகளுக்கு அரசின் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினாா்.

பின்னா், லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி சோ்வகாரன்பாளையத்தில் ரூ. 13.01 லட்சத்தில் தாா் சாலை மேம்பாட்டுப் பணி, லக்கமநாயக்கன்பட்டி சமுதாய நலக்கூடம் முதல் கம்பளியம்பட்டி வரை ரூ. 5.73 லட்சத்தில் கான்கிரீட் சாலை, கம்பளியம்பட்டி கிழக்கு ஆதிதிராவிடா் குடியிருப்பில் ரூ. 7.97 லட்சத்தில் கான்கிரீட் சாலை உள்ளிட்ட புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளையும் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், காங்கயம் வட்டாட்சியா் மோகனன், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.