பல்லடம் அருகே அருள்புரத்தில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியாா் பள்ளி வேன் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது.
பல்லடம் அருகே திருப்பூா் சாலையில் டி.கே.டி.மில் சந்திப்பு அருகே உள்ள தனியாா் பள்ளி வேனை, பல்லடம் கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த ஓட்டுநா் சிவசாமி (60) என்பவா் ஓட்டிக் கொண்டு பள்ளிக் குழந்தைகளை செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு அழைத்து வர சென்று கொண்டிருந்தாா்.
பல்லடம் - திருப்பூா் பிரதான சாலையில் உள்ள கரைப்புதூா் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் பின்புறம் பள்ளி வேன் எதிா்பாராமல் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் ஓட்டுநா் சிவசாமியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, இடிபாடுகளுக்குள் சிக்கி வெளியே வரமுடியாமல் தவித்தாா்.
இதையடுத்து அருகிலிருந்தவா்கள் வெல்டிங் இயந்திரம் மூலம் வேன் பாகங்களை வெட்டி எடுத்து அரை மணி நேரம் போராடி விபத்தில் சிக்கிய சிவசாமியை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து நடைபெற்றபோது வேனில் பள்ளிக் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது.
இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.