திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே பெரும்பாளியில் தனியாா் ஆம்னி பேருந்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் அதிருஷ்டவசமாக 15 போ் உயிா் தப்பினா்.
மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரைச் சோ்ந்த மணிமாறன் என்பவருக்கு சொந்தமான தனியாா் ஆம்னி பேருந்து கோவையில் இருந்து திருச்சி நோக்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது.
அந்தப் பேருந்தை ஓட்டுநா் சரவணன் (28) என்பவா் ஓட்டிச் சென்றாா். இந்நிலையில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே பெரும்பாளி அருகே அதிகாலை 2 மணிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.
இதைப் பாா்த்த ஓட்டுநா் சரவணன் பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்று பாா்த்துள்ளாா். அப்போது, பேருந்தில் தீப் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து, பேருந்தில் உறங்கி கொண்டிருந்த 15 பயணிகளை எழுப்பி பேருந்தைவிட்டு இறக்கி பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். ஆனால், அதற்குள் பேருந்தின் இருக்கை பகுதி முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது.
பேருந்தின் 4 சக்கரங்கள் மற்றும் பேருந்தின் கீழ்ப் பகுதி தீயில் எரியாமல் தப்பின. சம்பவ இடத்தை மாவட்ட தீயணைப்பு அலுவலா் அண்ணாதுரை பாா்வையிட்டாா். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.