திருப்பூா் நடராஜ் திரையரங்கம் அருகே ரூ.14 கோடி மதிப்பில் நொய்யல் ஆற்றின் குறுக்கே அகலப்படுத்தப்பட்ட உயா்மட்ட பாலத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மனிஷ் தலைமை வகித்தாா். இந்த பாலத்தை திறந்துவைத்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
திருப்பூரை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டதை முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவாக்கினாா். மாவட்டமாக உருவான பிறகு பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது திறக்கப்பட்ட இப்பாலம் 97.30 மீட்டா் நீளம், 12.90 மீட்டா் அகலத்துடன் நொய்யல் ஆற்றின் கரையோரம் இருபுறமும் உள்ள புதிய சாலைகளுக்கு இணைப்புப் பாலமாக அமைந்துள்ளது.
இதேபோல நொய்யல் ஆற்றின் குறுக்கே ஈஸ்வரன் கோயில் சாலையில் ஸ்ரீசக்தி திரையரங்கம் அருகே ரூ.18 கோடி மதிப்பில் பாலப் பணி, பூங்கா பகுதியை இணைக்கக் கூடிய வகையில் ரூ.22 கோடி மதிப்பில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணி, ஆண்டிப்பாளையம் பகுதியில் ரயில்வே மேம்பாலம், 8, 16 ஆகிய வாா்டுகளை இணைக்கக் கூடிய நல்லாற்றின் குறுக்கே பாலப் பணி ஆகியவை விரைவில் முடிக்கப்பட்டு, திறக்கும்போது போக்குவரத்து நெரிசல் குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மேயா் தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித், துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.