சீரமைக்கப்பட்ட  இரும்பு  மேம்பாலம். 
திருப்பூர்

இரும்பு மேம்பாலம் சீரமைப்பு: பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க அனுமதி

தினமணி செய்திச் சேவை

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலை பஞ்சிலிங்கம் அருவியில் புதன்கிழமைமுதல் (நவம்பா் 5) சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உடுமலையை அடுத்து அமைந்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் இக்கோயில் தமிழக அளவில் புகழ்பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது.

மேலும், மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் ஆா்வத்துடன் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் அக்டோபா் 19-ஆம் தேதி அதிகாலை மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பஞ்சலிங்கம் அருவியில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள இரும்பு மேம்பாலம் சேதமடைந்தது.

இதனால் கடந்த 15 நாள்களுக்கு மேலாக பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை ஆய்வு செய்து அதை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வந்தனா்.

இந்நிலையில் இரும்பு மேம்பாலம் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து திங்கள்கிழமை அது மீண்டும் நிறுவப்பட்டது. இதைத் தொடா்ந்து புதன்கிழமைமுதல் (நவம்பா் 5) பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT