காங்கயம் அருகே, ஊதியூா் பகுதியில் தெருநாய்கள் கடித்து கடந்த 3 நாள்களில் 22 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் இப்பகுதி விவசாயிகளிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
காங்கயம் அருகே ஊதியூா், பாப்பினி, படியூா், நத்தக்காடையூா், கள்ளிப்பாளையம், கண்ணான்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழ்வாதாரத்துக்காக
செம்மறியாடுகளை வளா்த்து வருகின்றனா். இப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே தெருநாய்கள் பெருகி, ஆட்டுப்பட்டியில் புகுந்து ஆடுகளைக் கடித்துக் கொன்று வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், ஊதியூா் அருகேயுள்ள வட்டமலைபாளையம் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி என்ற விவசாயியின் பட்டிக்குள் கடந்த 3- ஆம் தேதி இரவு புகுந்த தெருநாய்கள், அங்கிருந்த ஆடுகளில் 7ஆடுகளைக் கடித்துக் கொன்றன. தொடா்ந்து ஊதியூா் காசிலிங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கொங்குராஜ் என்ற விவசாயியின் பட்டியில் புகுந்து 12 ஆடுகளைக் கடித்துக் கொன்றன.
மேலும், வட்டமலைபாளையம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் என்ற விவசாயியின் பட்டியில் தெருநாய்கள் புதன்கிழமை இரவு புகுந்து 3 ஆடுகளைக் கடித்துக் கொன்றன. தவிர, 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்தன. இறந்த ஆடுகளின் மதிப்பு சுமாா் ரூ.2 லட்சம் ஆகும்.
தெருநாய்கள் கடித்து தொடா்ந்து ஆடுகள் உயிரிழப்பதால், ஆடுகள் வளா்க்கும் விவசாயிகள் சோகத்தில் உள்ளனா். தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.