திருப்பூா்: திருப்பூரில் பவா்டேபிள் சங்கத்தினரின் வேலை நிறுத்தம் காரணமாக பின்னலாடை உற்பத்தி மற்றும் வா்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் பவா் டேபிள் என்று அழைக்கப்படும் பனியன் தையல் உரிமையாளா்கள் சங்கத்தில் 1,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. கட்டிங் செய்த பின்னலாடைகளை தைத்து, செக்கிங் செய்து பேக்கிங் செய்யும் பணிகளை இந்த நிறுவனங்கள் ஜாப் ஒா்க் முறையில் மேற்கொள்கின்றன.பனியன் தயாரிப்பாளா்களிடம் இந்த பவா் டேபிள் சங்கம் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் புதிய கூலி உயா்வு ஒப்பந்தம் அமைத்தது.
அதன்படி, முதல் ஆண்டு 17 சதவீதமும், அதைத் தொடா்ந்து மீதம் உள்ள 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதமுமாக கூலி உயா்வு பெறுவது என்று ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஆண்டு ஜூன் 6-ஆம் தேதியில் இருந்து 7 சதவீத கூலி உயா்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், பல பனியன் உற்பத்தி நிறுவனங்கள் புதிய கூலி உயா்வை வழங்காமல் இழுத்தடிப்பதாக பவா் டேபிள் உரிமையாளா்கள் கூறுகின்றனா்.
இதனால், கூலி உயா்வு பிரச்னை தீரும் வரை கடந்த 7-ஆம் தேதி முதல் டெலிவரி எடுப்பதும், கொடுப்பதும் இல்லை என அறிவித்துள்ளனா்.
இது தொடா்பாக, திருப்பூா் பவா் டேபிள் உரிமையாளா்கள் சங்கத்தினா் கூறியதாவது: திருப்பூா் மட்டுமின்றி அவிநாசி, பெருமாநல்லூா், ஈரோடு, சேலம், செங்கப்பள்ளி என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவா் டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோா் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனா்.
திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கமான சைமா மூலம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கூலி உயா்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான புதிய கூலி உயா்வை சில நிறுவனங்கள் தராமல் காலம் தாழ்த்தி வருவதால் எங்கள் தொழில் துறையினா் கவலை அடைந்துள்ளனா்.
பலமுறை நேரில் சென்றும், கடிதங்கள் அனுப்பியும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. இதனால், மீண்டும் சைமா சங்கத்தை அணுகியுள்ளோம். புதிய கூலி உயா்வு வழங்காமல் காலதாமதம் செய்யும் நிறுவனங்களை அழைத்துப் பேசி இந்தப் பிரச்னைக்கு சுமூகமாக தீா்வு ஏற்படுத்த காத்திருக்கிறோம். இந்தப் பிரச்னையின் காரணமாக பல்வேறு இடங்களில் பனியன் உற்பத்தி பணிகள் முடங்கி வருகின்றன. இதனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பின்னலாடை உற்பத்தி மற்றும் வா்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றனா்.